யு-ட்யூப் (You Tube) : வயது ஐந்து

மே 5, 2010

இன்று வீடியோக்களுக்கென தனித் தளமாய் அனைவரின் விருப்ப தளமாக இயங்குவது யு–ட்யூப். இதில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகப் பதிவு செய்து, தங்களின் வீடியோ காட்சியைப் பதிவு செய்து, உலகம் அறியத்தரலாம்; அல்லது தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பார்க்கத் தரலாம்.

முதல் முதலில், இதில் ஒரு வீடியோ பைலைப் பதிந்தவர் யு–ட்யூப் தளத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாவர் கரிம் என்பவர். ‘Me at the Zoo’ என்ற 19 விநாடிகள் ஓடும் வீடியோ பைல் ஒன்றை இந்த தளத்தில் ஏப்ரல் 23 அன்று பதிந்தார். சென்ற வாரம் இதன் ஐந்தாவது ஆண்டுவிழா நிறைவேறியது. தான் சாண்டியாகோ விலங்கியல் பூங்கா சென்று வந்த நிகழ்வினைப் படமாக எடுத்து இத்தளத்தில் பதிந்து, இத்தளத்தின் முதல் பயனாளராகவும் மாறினார். இதன் பின் பல லட்சக்கணக்கான வீடியோ பைல்கள் இதில் பதியப்பட்டு, இன்று பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது யு–ட்யூப் தளம்.

திரைப்படங்கள் தயாரிப்பவர்கள் கூட இதில் தங்கள் பட பைல்களைப் பதிந்து, இலவசமாகவும் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையிலும் தர முன்வந்துள்ளனர். யு–ட்யூப் தளமும் அண்மையில் அமெரிக்கா நாட்டில் மட்டும், கட்டணம் செலுத்தி வீடியோ பைல்களை வாடகைக்கு விடும் திட்டத்தினை இந்த தளத்தில் ஆரம்பித்துள்ளது.

தொடர்ந்து அனைத்து நாட்டிற்கும் இது விரிவாக்கம் செய்யப்படுமானால், தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் கூட்டம் குறையலாம். ஐந்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய யு–ட்யூப் தளத்திற்கு நாமும் வாழ்த்துக்களைக் கூறுவோம்.

Advertisements

விரைவில் வெளிவரும் Windows 7 தொகுப்பு

ஜூலை 16, 2008

மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய ஒப்ரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வெளியிடும் முன் அது குறித்த தகவல்களை கசிய வைத்திடும், அல்லது வெளியிடும் முன் மிகப்பெரிய அள்வில் விளம்பரம் செய்திடும். மைக்ரோசொப்ட் நிறுனனத்தின் அடுத்த விண்டோஸ் ஒப்ரேட்டிங் சிஸ்டத்திற்கான இன்றைய பெயர் விண்டோஸ்-7. விண்டோஸ் விஸ்டாவிற்கு அடுத்த சிஸ்டமாக விண்டோஸ் -7 வர இருக்கிறது. முதலில் இதற்கு வியன்னா என்றும் ப்ளாக் கோம் என்றும் பெயர்கள் இடப்பட்டன.

இது வரும் 2010ஆம் ஆண்டில்தான் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்தத் தொகுப்பு வரும் 2009ஆம் ஆண்டிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்ரேட்டிங் சிஸ்டம் குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமன அறிவிப்பு எதுவும் வரவில்லை டஎன்றாலும், இந்த தொகுப்பின் 32 பிட் ம்ற்றும் 64பிட் என இரு வகை கிடைக்கும் என்று தெரிகிறது.

இந்த பதிப்பில் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தக்கூடிய சில வசதிகள் தரப்படலாம். இதில் பேக் அப் வசதிகளும், புதிய வகையிலான கண்ட்ரோல் பேன்ல் அம்சங்களும் கிடைக்க இருக்கின்றன. வினண்டோஸ் எக்சஸ் புளோரர் தொகுப்பு ௮ இத்துடன் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமரா

ஜூன் 24, 2008

செல்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமராவை உள்ளடக்கிய புதிய செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. C905 Cyber-shot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன், சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன் (Cyber-shot வரிசையில்) என்ற பெருமையை பெற்றுள்ளது.

செனான் (Xenon) ப்ளாஷ், ஃபேஸ் டிடெக்சன், ஆட்டோ ஃபோகஸ், ஸ்மார்ட் கான்ட்ராஸ்ட் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் 2.4 அங்குல scratch-resistant வண்ணத்திரை உள்ளது.

2 ஜிபி மெமரி ஸ்டிக், யுஎச்பி அடாப்டர் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளுக்கு இதில் உள்ளது, இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.


சீனாவில் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையம்

செப்ரெம்பர் 22, 2007

தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவிற்கு சவாலாகும் மாபெரும் இலக்குடன் சீனா களமிறங்கியுள்ளது.

அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கில் உள்ள டாலியான் என்ற கடற்கரை நகரில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றின் கட்டுமானப் பணியை சீனா துவக்கியுள்ளது.

இது சீனாவின் வெறும் சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல. முதல் தர பணிச் சூழலுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப நகரம் என்று டாலியான் நகர மேயர் பெருமையுடன் கூறுகிறார். இந்த மையம் 40 கி.மீ பரப்பளவில் கட்டப்படுவதுதான் இதன் சிறப்பம்சம்.

லியான் டியான்டி தகவல் தொழில்நுட்ப மையத்தை உருவாக்க 15 பில்லியன் யுவான்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளை சீன மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் சேர்ந்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மையத்தை உருவாக்குவதன் மூலம் 2012 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் ஒட்டு மொத்த மென்பொருள் ஏற்றுமதியை 3.5 பில்லியன் டாலர்களாக உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இது தற்போது செய்யப்படும் ஏற்றுமதியைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும்.

மென்பொருள் மையமாக உருவாக்கப்படவுள்ள இந்த துணை நகரத்தில் உண்மையில் அலுவலக கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவையும் இடம்பெறும் என்று இந்த கட்டுமானப் பணிக்கு முதலீடு செய்து வரும் ஹாங்காங் நிறுவனமான ஷூய் ஒன் குழுமத் தலைவர் வின்சென்ட் லோ தெரிவித்தார்.

தரைத் தளப் பரப்பளவு மட்டும் 4 மில்லியன் சதுர மீட்டர்கள் கொண்ட இந்த கட்டுமானப்பணி முடிய 7 முதல் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிகிறது.

முதல் கட்ட நடவடிக்கைகள் ஜப்பான் மற்றும் கொரிய நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையவுள்ளது. ஆனால் முக்கிய இலக்கு ஐ.பி.எம் மற்றும் ஆரக்கிள் ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளை மேம்படுத்துவதாய் இருக்கும் என்று தெரிகிறது.

வடகிழக்கு ஆசியாவிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஏற்றுமதி மையமாக இந்த டாலியான் மையம் திகழும் என்று சீன தகவல் தொழில் நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், டாலியான் நகரில் 2.5 பில்லியன் டாலர்கள் செலவில் வேஃபர் ஃபேப்ரிகேஷன் மையம் (Wafer Fabrications Facility) ஒன்றை கட்டுவதற்கான பணியை ஏற்கனவே துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாலியானில் சத்யம் நிறுவனத்திற்கு ஏற்கனவே மையம் உள்ளது. தற்போது ஹெச்.சி.எல். நிறுவனம் ஒரு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவின் சவாலை சமாளிக்க சீனா வரிந்து கட்டி களமிறங்கியுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்


மைக்ரோசாஃப்ட்டின் zunePhone தயார்…

செப்ரெம்பர் 12, 2007


இணையம்

ஓகஸ்ட் 21, 2007

எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது.

இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு என்கிற இரு ராட்சசத் தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழுந்தது. அது பெரும்பாலும் அமெரிக்க மூலதனம், அமெரிக்கச் சந்தை,அமெரிக்கக் கலாச்சாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருப்பது. அது தொடக்கத்திலிருந்தே ஆங்கில மொழியையே அடிப்படைத் தொடர்பு ஊடகமாகக் கொண்டிருக்கிறது. தமிழோ, சீனமோ ஒரு வலையகத்தில் உள்ள மொழி எதுவாயினும் அதன் முகவரி ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. உலகத்தையே ஒரு தகவல் குடையின் கீழ் கொண்டு வந்து அதன் மூலம் தன் ஏகாதிபத்தியத்தை என்றென்றைக்குமாகத் தொடர உலகின் ஒரு தரப்பு மக்கள் பிரிவினர் (அமெரிக்கர்-வெள்ளையர்-ஆங்கில மொழியினர்) செய்த சதி என்று இதை விமர்சித்ததுமுண்டு.

இவை அனைத்தும் பொய்யல்ல. ஆனால், வேறு உண்மைகளும் இருக்கின்றன. இணையம் பல புதுமைகளைப் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது. அது சந்தை முதன்மைப்படுத்தும் கலாச்சாரங்களுக்கு மாற்றாக, எண்ணற்ற பிற கலாச்சாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது. அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை. நாம் ஒரு பன்னாட்டுத் தமிழ் உறவை வேறு ஊடகங்கள் மூலம் சாத்தியப்படுத்த முடிந்ததில்லை.

மகத்தான வியூகங்களை அமைக்காமலேயே இணையம் அதைச் சாதிக்கிறது. அது ஒரு வித்தியாசமான ஊடகம். புத்தகங்கள் ஒரே சமயத்தில் பன்மொழித் தன்மையுடையனவாக இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட அலைவரிசை ஒரே சமயத்தில் பல மொழிகள் பேசுவதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட வலையகம் ஒரே சமயத்தில் பல மொழிகளைப் பேச முடியும். மொழித் தேர்வை வேறு எங்கும் போல் அல்லாமல் இங்கே படிப்பவர்களிடம் விட்டு விடலாம்.

இணையம் ஒரு பன்மொழி ஊடகம் என்று சொல்கிறபோது அதில் வேறு பல உண்மைகளும் அடங்கியிருக்கின்றன. கூட்டன்பர்கின் அச்சுப்பொறி புரட்சிக்குப் பிறகு எல்லா மொழிகளுக்கும் கிடைத்திருக்கும் ஓர் பதிவு சாதனமாக இணையம் விளங்கியிருக்கிறது. நூறே பேர் பேசும் ஒரு பழங்குடியினர் மொழியில் ஒரு புத்தகம் போட சாத்தியமாவ தில்லை. அல்லது பேசுவோர் எண்ணிக்கை கோடிகளில் இல்லாத பட்சத்தில் அதன் அலைவரிசையில் விண்மீன்களும், சூரியனும் முளைப்பதில்லை. ஆனால், எனக்கும் உங்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு மொழியில் நம்மிருவருக்குமான ஒரு பதிவை இணையத்தில் செய்ய முடியும்.
இணையத்தின் வளர்ச்சி அப்படி இருக்கிறது. அதனால் இதுவரை அச்சேறாத மொழிகள் கூட பேச்சுமொழியாக ஒலித்தொடராக இணையம் என்னும் பல்லூடகத்தில் இடம் பெற முடியும்.

நூற்றுக் கணக்கான செயற்கை மொழிகளுக்குக் கூட இணையத்தில் பக்கங்கள் இருக்கின்றன. தமிழ் : இன்னொரு ஆயிரத்தாண்டுக்கும் அணியமாக… இனம் சார்ந்து மட்டுமே பேசப்படும் ஆயிரக்கணக்கான மொழிகளில் ஒன்று தமிழ். அது பல நாடுகளில் பேசப்பட்டாலும் தமிழர்களால் மட்டுமே பேசப்படும் மொழி. அது ஆங்கிலம் போல ஸ்பானிஷ் போல பன்னாட்டுத் தகவல் ஊடகமல்ல. எனவே, தமிழை ஒத்த மொழிகள் – இந்தியோ, திபெத்தியனோ – சீக்கிரம் பட்டுப்போய்விடும் என்று சிலர் கட்டியம் கூறினார்கள். ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்ற அவநம்பிக்கை பரப்பப்பட்டது. தமிழ் புதிய தலைமுறைகளால் கைவிடப்பட்டு பொருண்மிய வாழ்க்கைக்கு ஆங்கிலம், கலாச்சாரத்துக்குத் தமிங்கிலம் என சூழல் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது. இப்போதெல்லாம், தமிழால் அல்லது இதைப் போன்ற வேறு இன மொழிகளால் இனி உயிர்ப்புடன் இயங்க முடியாது என்பதைச் சொல்ல அந்தந்த மொழியினரே தயங்குவதில்லை. ஆனால், திடீரென்று இணையம் அந்த அவநம்பிக்கைவாதிகளுக்கு முகத்தில் அறைந்தது போல் பதில் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ் வலையகங்களுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் புதிய ஆயிரத்தாண்டு பிறக்கும் தருவாயில் நம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கும் சேதி.

தமிழர்கள் மறுபடியும் ஒரு புதிய ஊடகத்தின் பின் ஓடுகிறார்கள் என்பதல்ல அந்த சேதிக்கு உள்ளர்த்தம். இணையம் என்பது அடிப்படையில் டிஜிட்டல் வடிவத்திலுள்ள தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஊடகம். டிஜிட்டல் வடிவத்தில் தமிழ் என்பதுதான் இங்கே அழுத்திச் சொல்ல வேண்டிய விஷயம். ஏனெனில், எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்காலத் தகவல் தொடர்பின் அடிப்படையே டிஜிட்டல் வடிவம் தான் என்பது இன்று உலகமறிந்த உண்மை. அதனாலேயே இது ‘டிஜிட்டல் யுகம்’ என்றழைக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல. வேறொரு கோணத்திலும் இணையத்தில் தமிழ், கணித்தமிழ் போன்ற வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ளது. மூன்று விதமான தகவல் தொடர்பு முறைகளை ஒருங்கே கொண்டிருக்கிறது. முதலாவது, இரு தனி நபர்களுக்கிடையே மட்டும் நடக்கும் தனி நபர் நிலைப்பட்ட தொடர்புகள் (உதாரணம் – மின் அஞ்சல், அரட்டை) இரண்டாவது ஏதோ ஒரு சரடால் ஒன்றுபட்டவர்களுக்குள் நடக்கும் குழு நிலைப்பட்ட தொடர்புகள் (உதாரணம் – மின்னஞ்சல் அட்டவணைகள், செய்திக் குழுக்கள்). மூன்றாவது ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் பரவலாகத் தகவல் பெறுநர்களுக்காக நடத்தும் வெகு சன ஊடகங்கள் (உதாரணம் – வலையகங்கள், மின் அஞ்சல், மின் இதழ்கள்)

எந்த மொழி மேற்கண்ட மூன்று அடிப்படைத் தகவல் தொடர்பிலும் வளமாகக் கையாளப்படுகிறதோ அந்த மொழியை நிகழ் கால மொழி, உயிருள்ள மொழி, வளரும் மொழி என்கிறோம். தமிழ் இன்று நிகழ்மொழியாக இருப்பதற்குக் காரணம் அது இந்த மூன்று தளங்களிலும் பயன்பாட்டில் இருப்பதுதான். அதே சமயம், அதன் எதிர்காலம் குறித்துக் கவலைப்படக் காரணம் அது எல்லா புலங்களிலும் (தொழில், வணிகம், சட்டம், ஆன்மிகம், நிர்வாகம்) தகவல் தொடர்பு மொழியாக இல்லாமலிருப்பதுதான். இணையம் இந்தக் கவலையைத் தீர்க்க வந்த அருமருந்து என்று சொல்ல முடியாவிட்டாலும் அது அடிப்படையான மூன்று தகவல் தொடர்பு முறைகளிலும் தமிழ்ப் பயன்பாட்டுக்கு வழிவகை செய்துள்ளது. இன்று நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பக்கங்கள் உள்ளன. தமிழிலேயே மின் அஞ்சல் செய்ய வசதி இருக்கிறது. தமிழ் எழுத்துகளில் இல்லையென்றாலும் ரோமன்
வரிவடிவத்தில் தமிழில் அரட்டை அடிக்கிறார்கள். தமிழ் இனம், மொழி, அரசியல் பற்றி வம்பளக்கும் மின்னஞ்சல் அட்டவணைகள் உள்ளன. தமிழர்களை இணைக்கும் செய்திக் குழுக்களில் நாள்தோறும் பல தரப்பட்ட தகவல்கள் இடம் பெறுகின்றன.

வருங்காலத்தில் அடிப்படையான தகவல் தொடர்புகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவத்தில், இணையம் போன்ற ஏதோ ஒரு வலைப்பின்னலில் தான் நிகழப் போகிறது என்பதால் அந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னை வளர்த்துக் கொள்ளத் தமிழ் தயாராக வேண்டிய
நிர்ப்பந்தம் இருக்கிறது. மகிழ்ச்சியான மாற்றம் என்னவென்றால் தமிழ் அந்த நிர்ப்பந்தத்தை ஒரு சவாலாகவும், சந்தர்ப்பமாகவும் எடுத்துக் கொண்டிருப்பதுதான். இந்த முன்னேற்றத்தைத்தான் ஒரு காலத்தின் அளவுகோலாக – திருப்புமுனையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதை வெறுமனே ஒரு தொழில்நுட்ப அல்லது மீடியா மாற்றமாகக் கொள்ள முடியாது. ஏனெனில், இந்த மாற்றங்களுக்குப் பின்னுள்ள டிஜிட்டல் தொழில் நுட்பமும், தொலைத்தொடர்பு தொழில்நுட்பமும் ஒரு புதிய நாகரிகத்தின் தோற்றத்தைக் குறிப்பதால், உலகின் அத்தகைய போக்கோடு இசைந்து தமிழர்கள் மேற்கொண்ட ஒரு புதுப்பிப்பாகவே கணித்தமிழ்/தமிழ் இணைய வளர்ச்சியைப் பற்றிக் கூற முடியும். இந்த அர்த்தத்தில்தான் தமிழ் இன்னொரு மீடியா தலைமுறைக்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதைப் பார்க்க முடியும். ஆனால், இந்த மாற்றங்களும் புதுப்பிப்பும் ஓரிரு நாளிலோ ஓரிரு நபராலோ நடந்ததல்ல. கணித்தமிழ் : காலத்தின் கட்டாயம் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சி குறித்துப் பிற்காலத்தில் திரும்பிப் பார்க்கும் ஓர் ஆராய்ச்சியாளர் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற ஒரு திடீர் திருப்பத்தைக் கண்டுகொள்ளாமல் போக மாட்டார். அந்தத் திருப்பம் தமிழும், கணிப்பொறி நுட்பமும் கைகோர்த்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வாகும். மொழி, ஊடகங்களின் மூலமாகவே நிலைத்து நிற்கிறது. தொடர்ந்து நிலவுகிறது. பேச்சும் எழுத்தும் அவற்றுக்கே உரிய ஊடகங்களின் மூலமாகப் பயணித்து மொழி வழி சமூகங்களை நிலவச் செய்கின்றன திரைப்பாடலாக, வானொலிச் செய்தியாக, வார இதழாக, தொலைக்காட்சித் தொடராக. இதில் ஆரம்பத்தில் கல்வெட்டிலும், ஓலையிலும் இருந்த தமிழை அச்சுக்குக் கொண்டு வந்தது அச்சுப் பொறி. கூட்டன்பர்க்கின் அந்தக் கண்டுபிடிப்பு மொழியின் வரலாற்றோடு மொழித் தொழில்நுட்பம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இந்த நூற்றாண்டில் கணனி நடைமுறைக்கு வந்ததும் அதுவும் அடிப்படையில் ஒரு மொழித் தொழில்நுட்பத்தையும் தன்னுடன் கொண்டு வந்தது. கணனி பதிப்புத் துறையில் நுழைந்தபோது அழகான எழுத்துருக்களை உருவாக்குவது என்கிற தேவை வளர்ந்தபோது அந்த மொழித் தொழில்நுட்பத்துக்கான தகவல் யுகத்துக்கான கடைக்கால் போடப்பட்டது.

தொழில்நுட்பத்தின் தேவை முதலில் பதிப்புத்துறையில் உணரப்பட்டது. பிறகு பல்வேறு மொழிகளில் சொல் செயலிகள். தரவுத் தளங்கள் போன்ற பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்கக் கணனியின் இயங்கு தளத்துக்கேற்ற (operating systems) எழுத்துகளைப் படைக்க வேண்டியதாயிற்று. பிறகு இந்தப் பத்தாண்டின் தொடக்கத்தில் இணையம், மின் அஞ்சல் ஆகியவை பரவலான பிறகு தகவல் பரிமாற்றத்துக்கேற்ப எழுத்துகள் அமைய வேண்டியது குறித்த ஆய்வுகளில் மொழி நுட்பவியலாளர்கள் இறங்க வேண்டியதாயிற்று. அதாவது, ஒரு பனையோலையைப் பதனம் செய்து எழுதுவதற்குத் தயாராக்க வேண்டிய காலத்தில் நினைத்துக் கூடப் பார்த்திராத அளவில், காரீய எழுத்துகளில் அச்சிட்ட காலத்தில் கனவு கண்டிராத அளவுக்கு இன்று தகவல் தொடர்பு பேரளவுக்குத் தொழில்நுட்ப மயமாகி விட்டதால் மொழியின் வளர்ச்சியும் இருப்பும் கூட தொழில்நுட்பத்தின் கரங்களில் சிக்கிக் கொண்டது. இது நல்லதா கெட்டதா என்பதல்ல கேள்வி. இதை அனுமதிப்பதா இல்லையா என்பதும் கூட வீண் கேள்வியே. கேள்வி, இந்தத் தகவல் நுட்பத் தேவையை நாம் நம் மொழிக்காக நிறைவேற்ற முடியுமா என்பதே.முடியும் என்றல்ல. முடிந்திருக்கிறது என்கிற சாதகமான வரலாற்றைத்தான் நாம் பார்க்கிறோம். அது தான் கணித்தமிழின் வளர்ச்சி.

கணித்தமிழின் வரலாற்றை நாம் இப்போது பேசப் போவதில்லை. அதன் வரலாற்றில் நடந்த முக்கிய மாற்றங்களை மட்டுமே நாம் பேசப் போகிறோம். பதிப்புத்துறை, அலுவலகச் செயல்பாடு, பிறகு இணையம் என்று பல தளங்களில். தமிழ் மென்பொருள்கள் புழக்கத்துக்கு வந்த இந்தத் தொண்ணூறுகளில் கணனி மட்டும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்த ஆரம்பித்த போது தீர்க்க முடியாததாகத் தோன்றிய பிரச்சினை ஒன்று முளைத்தது. ஆங்கிலத்தில் உள்ள மென்பொருள்கள் அனைத்தும் தங்களுக்குள் எழுத்து வடிவத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வசதியாக ASCII என்கிற எழுத்துக் குறியீட்டு முறை ஒன்றைப் பயன்படுத்துகின்றன. எழுத்துகளைக் கணிப்பொறிக்குப் புரியும் வகையில் குறியீடாக்கும் இந்தச் செயல் encoding எனப்படுகிறது. இந்தக் குறியீட்டாக்கம் என்பது அனைத்து மென்பொருள்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்படி செய்யப்படுகிறது. அதாவது ஆங்கிலத்துக்கான குறியீடு என்பது எல்லா இடங்களிலும் எல்லா மென்பொருள்களிலும் ஒன்றாகவே ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தகவல் தொழில் நுட்பத் துறையில் தரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதைப் போலவே எழுத்துகளை உள்ளிடுவதற்கான விசைப்பலகையையும் , விசைப்பலகை அமைப்பு வடிவம் என்ற ஒரே அமைப்பாகத் தரப்படுத்தியிருக்கிறார்கள். இதே மாதிரியான தரப்படுத்தப்பட்ட சீர்மையான குறியீட்டு முறை தமிழுக்கும் வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் முனைந்ததுதான் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு அற்புதம். இதைத் சாதித்ததன் மூலம் அவர்கள் டிஜிட்டல் யுகத்துக்கேற்பத் தமிழைத் தயார் செய்து விட்டார்கள். நீண்ட எதிர்காலத்துக்குத் தமிழைத் தொடரச் செய்வதற்காக, வருங்காலத்
தலைமுறையினருக்கு ஒரு பாரம்பரியச் சொத்தாகத் தமிழை மாற்றி விட்டார்கள். ஊர் கூடித் தேரிழுத்த கதை
கணித்தமிழ் வளர்ச்சி குறித்து நிகழ்ந்த மூன்று ஆய்வரங்குகளினூடே இந்த வரலாற்றைப் பதியலாம்.

1994 இல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த ‘தமிழும் கணிப்பொறியும்’ என்கிற இருநாள் கருத்தரங்கிலேயே விசைப்பலகை தரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனினும், அந்த முதல் முயற்சிக்கு அரசின் ஆதரவும் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களின் ஆதரவும் அன்று கிடைக்கவில்லை. பின்னாளில் நடந்த இரு தமிழ் இணைய மாநாடுகளுக்கு முன்னோடியாக இந்தக் கருத்தரங்கைக் கூறலாம். பல்கலைக் கழக கணிப்பொறித் துறைப் பேராசிரியர் வி. கிருஷ்ணமூர்த்தியின் முன் முயற்சியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு கணித்தமிழ் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்க முயற்சித்தது. ஆனால், அந்த சகாப்தம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் தொடங்கியது. 1997 மே மாதம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் கூட்டப்பட்ட முதல் பன்னாட்டுத் தமிழ்க் கணனி மற்றும் இணைய மாநாடுதான். கணித்தமிழ் வளர்ச்சியில் மட்டுமல்ல, தமிழ் வரலாற்றிலும் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் தமிழ்க் குறியீட்டு முறையைச் சரி வர உருவாக்குவதும் அதைத் தரப்படுத்துவது பற்றியும் வேகமாக உள்ளீடு செய்ய உதவும் ஒரு விசைப்பலகையை உருவாக்கித் தரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும், பிற கணித்தமிழ் அறிஞர்களும் வந்து கலந்து கொண்டனர். Tamil Net 97 – International Symphosium for Tamil Information Processing and Resources on the Internet என்ற தலைப்பிலான அந்த மாநாடு உலகம் முழுதுமுள்ள மொழிநுட்பவியலாளர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

தமிழ் நெட் ’97, சிங்கப்பூரின் பிரபல தமிழ் எழுத்தாளரும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்வித்துறையில் பேராசிரியராகவும் பணிபுரிந்து ‘கணியன்’ மென்பொருள் மற்றும் வலையகத்தின் மூலம் உலகத் தமிழர் மத்தியில் புகழ் பெற்று மறைந்த நா. கோவிந்தசாமி எடுத்த முயற்சியில் நடத்தப்பட்டது. தமிழையும் ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கையில், தேசியப் பல்கலைக்கழகத்தின் ‘இன்டர்நெட் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் யூனிட்’ உடன் (Internet Research and Development Unit-IRDU) – இன்று Center for Internet
Research இணைந்து தமிழ் இணையத்துக்காக அடிப்படை ஆராய்ச்சிகளைத் தொடங்கிய நா.கோவிந்தசாமிதான் முதல் தமிழ் வலைப்பக்கத்தை வடிவமைத்தவர். அக்டோ பர் 1995 இல் சிங்கப்பூர் அதிபர் திரு. ஓங் டாங் சாங் தொடக்கி வைத்த Journey: Words, Home and Nation – Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையம் பிரவேசம் செய்தது. அதை சாதித்த IRDU வின் குழுவில் கோவிந்தசாமியும், அவரோடு இணைந்து பணியாற்றிய வல்லுநர்கள் டாக்டர் டான் டின் வீ, லியோங் கோக் யாங் ஆகிய இரு சீனர்களும் முதல் தமிழ்ப் பக்கத்தை வலையேற்றிய பெருமைக்கு உரித்தானவர்கள். தமிழ்நெட் ’97 மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணித்தமிழ் தொழில் நுட்பப் பிரச்சினைகள் குறித்து ஒரு இணையத்தில் மெயிலிங் லிஸ்ட்கள் தொடங்கப்பட்டு விவாதங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. முரசு மென்பொருள் தயாரிப்பாளர் முத்தெழிலன், ஸ்விட்ஸர்லாந்திலிருந்து
‘புராஜெக்ட் மதுரை’ என்கிற தமிழ் மின்னுரைகளைத் தொகுத்து வரும் கல்யாணசுந்தரம், பெங்களூர் ‘ஆப்பிள்சாஃப்ட்’ நிறுவனத்தின் அன்பரசன் உள்பட பலர் இந்த விவாதங்களில் கலந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த மின்னஞ்சல் பட்டியலில் அலசப்பட்ட விஷயங்களைத் தொகுத்து வெளியிட்டால் அதை அதி முக்கிய ஆவணமாகப் பாதுகாத்து வைக்க வேண்டியிருக்கும். கண் முன் நடந்த வரலாற்றின் பதிவாக அது இருக்கும்.

அடுத்த மாநாடு 1999 இல் பிப்ரவரி 7-8 தேதிகளில் சென்னையில் நடந்தபோது காலம் வேகமாக உருண்டோடி விட்டிருந்தது. பொதுவாகவே தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிக கவனம் காட்டிய தமிழக முதல்வர் மு. கருணாநிதியும் தமிழக தகவல் தொழில்நுட்பப் பணிக்குழுவின் துணைத் தலைவரான இன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறனும் காட்டிய ஆர்வத்தின் விளைவாக ஒரு கல்வியாளர் கருத்தரங்காக மட்டுமே முடிந்து போயிருக்கக் கூடிய தமிழ் இணையம் ’99 ஒரு பெரிய மாநாடாக மாறியது மட்டுமல்ல, அது தீர்மானகரமான ஆய்வரங்காகவும் மாறியது.
முதல் மாநாட்டில் கலந்து கொள்ளாத தமிழகத்தைச் சேர்ந்த பல கல்வியாளர்களும், தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும் அதிக அளவில் கலந்து கொண்டதன் மூலம் மாநாடு வெற்றிகரமானது. கடுமையான விவாதங்களுக்குப் பிறகு வடிவெழுத்து சார்ந்த (glyph) தனிமொழி, இரு மொழிக் குறியீட்டு முறைகளும் ஒரு புதிய விசைப்பலகையும் நகல் திட்டங்களாக அறிவிக்கப்பட்டு பிறகு 100 நாள் சர்வதேச விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது.
இறுதியில் அன்று தமிழக அரசு தரப்படுத்தப்பட்ட விசைப் பலகையையும், குறியீட்டு முறைகளையும் அறிவித்தது. கணித்தமிழ் வளர்ச்சியில் முதல் மாநாடு ஒரு கவிதையை எழுதத் தொடங்கியதென்றால்
இரண்டாம் மாநாடு அதை ஒரு காவியமாக்கியது. இந்த மாநாட்டுக்குப் பின், கணித்தமிழ் என்கிற சொல் பிரபலமானது. இணையம் என்கிற வார்த்தை தமிழ் அகராதியில் நுழைந்தது. இந்த இரு மாநாடுகளுமே தமிழ் வளர்ச்சி தொடர்பான பல மாயைகளைத் தகர்த்தன. முதலில் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள் என்று தமிழ் ஆர்வலர்களே தங்கள் இயலாமையைப் புலம்பித் தீர்ப்பார்கள். ஆனால், இந்த மாநாட்டுக்குப் பிறகுதான் தமிழகத்தின் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் தங்களின் நலன்களையும், தமிழ் மென்பொருள் பயனாளிகளின் நலன்களைக் கருதியும் கணித்தமிழ் சங்கம் என்கிற அமைப்பை உருவாக்கினார்கள்.
தரப்படுத்துதல் சம்பந்தமாகவும் கணித்தமிழ் வளர்ச்சி தொடர்பாகவும் எவ்வளவோ விஷயங்கள் செய்யப்படாமல் இன்னும் இருக்கின்றன. உதாரணமாக, உலகப் பொதுக் குறியீட்டு முறையாக உருவாகி வரும் யூனிகோட் (UNICODE) முறையில் தமிழுக்கு முறையான இடத்தைப் பெற்றுத் தருவதற்கான ஆராய்ச்சியில் கணித்தமிழ் சங்கம் கூட்டாக இறங்கியிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தமிழ்க் கலைச்சொற்களை ஆக்கும் பணி தொடங்கியிருக்கிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் மென்பொருள் படைப்பாளர்களுக்கான அரசு நிதி எனப் பல திட்டங்கள் மூலமாகத் தமிழக அரசும் கணித்தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், அடுத்த ஆண்டில் 2000 இல் கொழும்பில் தமிழ் இணைய மாநாட்டை நடத்துவதென்று இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.
கணித்தமிழ் என்பது பத்தாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் பல தனித்தனி நிகழ்வுகளின் தொடர்ச்சிதான் என்றாலும், தமிழ் இணையம் ’99 க்குப் பிறகு இது இயக்கமாக மாறி விட்டதைப் பார்க்க முடிகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்களும், வல்லுநர்களும் அதிசயமாக ஒன்றிணைந்தார்கள். கல்வித்துறையிலிருந்து முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன், பேராசிரியர்கள் நா. கோவிந்தசாமி, வி. கிருஷ்ணமூர்த்தி, பொன்னவைக்கோ, நா. தெய்வசுந்தரம், குப்புசாமி, மொழியியலாளர் எம். கணேசன் போன்றவர்களும் மென் பொருள் தயாரிப்பாளர்களான முத்தெழிலன்,
கல்யாணசுந்தரம், அன்பரசன், இளங்கோவன், செல்லப்பன், மனோஜ் அண்ணாத்துரை, ஆண்டோ பீட்டர் போன்றவர்களும் இணைந்து செயல்பட்டனர். தமிழ்நெட்’ 97 இல் கலந்து கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெரால்ட் ஷிப்மேன், irdu வின் நிபுணர்கள் டான் டின் வீ, லியோங் கோக் யாங் இன்னொரு சீன கணிப்பொறியாளர் ஜேம்ஸ் செங் போன்ற தமிழரல்லாதவர்களின் பங்களிப்பும் இந்தத் தமிழியக்கத்துக்குப் பெருமை சேர்ப்பது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் இணையம் ’99 இன் போது தமிழக அரசு வழக்கத்துக்கு மாறாக அதீத வேகத்துடனும், உத்வேகத்துடனும் செயல்பட்டது தான் கணித்தமிழ் இயக்கத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. மீண்டும் அடிப்படைக்கு…..
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்கம், கடந்த தலைமுறையில் நடந்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றுக்கு சமமான ஒரு மொழி இயக்கமாக இந்தக் கணித்தமிழ் இயக்கத்தை நான் ஒப்பிட விரும்புகிறேன். இது சற்று மிகையாகவும் தோன்றலாம். ஏனெனில், கணித்தமிழ் இயக்கம் என்ற ஒன்று நடப்பதாக யாரும் அறிவிக்கவோ தலைமை தாங்கவோ இல்லைதான். ஆனால், முன்பே கூறியது போல பல தமிழ் ஆர்வலர்கள் – பல்வேறு துறையினர், பல்வேறு நாட்டினர் – தமிழைக் கணனியிலும், இணையத்திலும் காண ஆர்வம் கொண்டிருந்தனர். சொந்தக் காசு செலவு செய்து கொண்டு அமெரிக்காவிலிருந்து ஒரு தமிழ் ஆர்வலர் சென்னை மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார் என்றால், அவர் அவரை அறியாமலேயே கூட ஒரு ஆக்கபூர்வமான இயக்கத்துக்குள் இழுக்கப்பட்டிருக்கிறார் என்று தான் அர்த்தம். டிஜிட்டல் யுகம் மெல்ல மெல்லத் தமிழ்நாடு போன்ற வளரும் சமூகங்களையும் அரவணைத்து வருகிற வேளையில், மற்ற மொழியினருக்கெல்லாம் இது குறித்த விழிப்புணர்வு வருவதற்குள் தமிழர்கள் தங்கள் தாய்மொழிக்காக எடுத்திருக்கும் தொழில் நுட்ப இயக்கம் பற்றி வரலாறு குறித்து வைத்துக் கொள்ளும். வருங்கால சமூகம் அதை மெச்சும் என்ற எதிர்பார்ப்புடன் மட்டுமே நம் கடமையைச் செய்வோம்.

எழுத உதவியவை :
1. www.cir.nus.edu.sg/tamilweb (தமிழ் இணையம் 97 மாநாடு குறித்த தகவல்களுக்கு)
2. www.thamizh.com (தமிழ் இணையம் 99 மாநாடு குறித்த தகவல்களுக்கு)
3. www.tamilinaiyam2000.org (தமிழ் இணையம் 2000 மாநாடு குறித்த தகவல்களுக்கு)
4. www.kanithamizh.org (கணித்தமிழ் சங்கம் குறித்து)

செ.ச. செந்தில்நாதன்

இக் கட்டுரை ஆறாம்திணைத் தொகுப்பான ‘இணையத்தமிழ்’ நூலில் இடம்பெற்றுள்ளது.
‘இந்தியா டுடே’ பத்திரிகையில் பணியாற்றிய இதழாளரான இவர் தற்போது www.thamizh.com என்கிற வலையகத்தையும் நடத்தி வருகிறார்.


நாளைய செல்பேசிகள் கணினிகளாகச் செயல்படலாம்

ஓகஸ்ட் 21, 2007

nnns

செல்பேசிகளின் வருகைக்கு முன்பு பிரபலமாக இருந்த பேஜர் தொழில்நுட்பத்தை முழுமையாக ஓரங்கட்டிய பெருமை முழுக்க முழுக்க செல்பேசிகளைத் தான் சேரும் என்றால் மிகையாகாது. இதே போல புதிய செல்பேசி தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை யூகிக்கும் போது கணினிகளையே தூக்கி சாப்பிட்டுவிடுமோ என்றும் சிந்திக்க தோன்றுகிறது.செல்பேசி தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக ஒரு விசயத்தைக் கவனிக்கலாம். அதாவது, செல்பேசி சாதனத்தின் அளவு சிறியதாக ஆகி வரும் வேளையில் அது உள்வாங்கி வரும் வசதிகள் மிக பிரமாண்டமாய் வளர்ந்து வருகின்றன.அதுவும் அதன் வளர்ந்து வரும் சேமிப்பு நினைவகத் திறன் நிச்சயம் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறலாம். கிலோபைட்ஸ் அளவில் இருந்த செல்பேசிகளின் உள் நினைவகம், மெகாபைட்ஸ் அளவில் விரிந்து இப்போது ஜிகா பைட்ஸ் கொள்ளளவிற்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.மேலும், செல்பேசிகளுடன் இணையும் சாதனங்களின் பட்டியலும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது `மெமரி ஸ்டிக்’ எனப்படும் சேமிப்பு சாதனம் இணைக்கப்படுவதால், செல்பேசிகளின் நினைவக கொள்ளளவு திருப்திகரமாக உருவாகி வருகிறது.

மின்னஞ்சலில் வரும் கோப்புகளின் இணைப்பைப் பதிவிறக்கம் செய்து மெமரி ஸ்டிக்குகளில் சேமித்துக் கொண்டால் போதும், அந்த டேட்டாக்களை எங்கும் கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

செல்பேசி தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் தற்போதைய ஆராய்ச்சிகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் இவை கணினிகளுக்கு போட்டியாக செல்பேசிகளை உருவாக்குவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்று கூறலாம்.

பேஜர்களுடன் மட்டுமா செல்பேசிகள் போட்டியில் இறங்கின? செல்பேசிகள் இருக்கும் போது கைகடிகாரங்கள் தேவையா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதும் நாம் அறிந்தது தான்.

இதேபோல, செல்பேசி கேமிராக்களில் வளர்ந்து வரும் நுட்பங்கள், டிஜிட்டல் கேமிராக்களின் சந்தையை சற்றே ஆட்டம் காணச் செய்யுமா என்ற ஆய்வுகளை ஆரம்பிக்கும் அளவிற்கு தூண்டி இருக்கிறது.

இதுபோல ஒவ்வொரு முறையும் செல்பேசிகளின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, சர்வதேச சந்தையில் ஒரு சாதனத்தின் விற்பனை போக்கையே மாற்றி விடுவதாக அமைந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது.

இதனால் தானோ என்னவோ வரும் ஆண்டுகளில் செல்பேசிகள் கணினிகளாக செயல்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்து இருக்கிறார்கள்.

செல்பேசிகளின் செயல்படும் வேகம், நினைவக கொள்ளளவு மற்றும் பிற உபகரணங்களுடன் இணைக்கும் வசதி ஆகியவை மேம்படும் போது இவற்றுடன் விசைபலகை, மவுஸ் மற்றும் கணினி திரை ஆகியவற்றை இணைத்து கணினி போல செயல்படுத்தும் வாய்ப்புகள் வரலாம் அல்லவா!

தற்போது பாதி கணினியாக செயல்பட்டு வரும் செல்பேசிகள் வரும் ஆண்டுகளில் முழு கணினியாக செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது.

செல்பேசி தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் தற்போதைய ஆராய்ச்சிகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் இவை கணினிகளுக்கு போட்டியாக செல்பேசிகளை உருவாக்குவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்று கூறலாம்.

பேஜர்களுடன் மட்டுமா செல்பேசிகள் போட்டியில் இறங்கின? செல்பேசிகள் இருக்கும் போது கைகடிகாரங்கள் தேவையா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதும் நாம் அறிந்தது தான்.

இதேபோல, செல்பேசி கேமிராக்களில் வளர்ந்து வரும் நுட்பங்கள், டிஜிட்டல் கேமிராக்களின் சந்தையை சற்றே ஆட்டம் காணச் செய்யுமா என்ற ஆய்வுகளை ஆரம்பிக்கும் அளவிற்கு தூண்டி இருக்கிறது.

இதுபோல ஒவ்வொரு முறையும் செல்பேசிகளின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, சர்வதேச சந்தையில் ஒரு சாதனத்தின் விற்பனை போக்கையே மாற்றி விடுவதாக அமைந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது.

இதனால் தானோ என்னவோ வரும் ஆண்டுகளில் செல்பேசிகள் கணினிகளாக செயல்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்து இருக்கிறார்கள்.

செல்பேசிகளின் செயல்படும் வேகம், நினைவக கொள்ளளவு மற்றும் பிற உபகரணங்களுடன் இணைக்கும் வசதி ஆகியவை மேம்படும் போது இவற்றுடன் விசைபலகை, மவுஸ் மற்றும் கணினி திரை ஆகியவற்றை இணைத்து கணினி போல செயல்படுத்தும் வாய்ப்புகள் வரலாம் அல்லவா!

தற்போது பாதி கணினியாக செயல்பட்டு வரும் செல்பேசிகள் வரும் ஆண்டுகளில் முழு கணினியாக செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது.