தேவா விற்ற முறுக்கு சின்னக்கற்பனை
தேவா முறுக்கு டின்னை சைக்கிளில் கட்டிக்கொண்டு ஓட்டியபடி, ஒரு குறுக்கு சந்தில் கூவிக் கொண்டே வருகிறார்…தேவா : முறுக்கு முறுக்கு … அம்மா முறுக்கு முறுக்கு … தம்பி முறுக்கு முறுக்கு … அரிசி முறுக்கு … நெய் முறுக்கு … ஐயா வாங்குங்க அம்மா வாங்குங்க … ஆத்தா பாத்து பாத்து செஞ்ச கைமுறுக்கு…திடிரென்று சைக்கிள் பஞ்சராக, சைக்கிளை ஸ்டான்டு போட்டு நிறுத்துகிறார்.அந்த நேரம் பார்த்து விசிலடித்துக் கொண்டே சைக்கிளில் வரும் ஜெயந்தன் தேவாவை பார்த்துவிடுகிறார். அதை தேவா கவனித்துவிட்டு, பார்க்காதது போல் குனிந்து சைக்கிள் டயரை சீரியசாக பார்கிறார்.நிதானமாக சைக்கிளில் இருந்து இறங்கிய ஜெயந்தன், கிடை ஆடு தனியாக மாட்டிய சந்தோசத்தில் தேவாவிடம் பேச்சு கொடுக்கிறார்.
ஜெயந்தன் : தேவா ?
தேவா : ய்ய…யாருப்பா நீ …. என்று பார்க்காத்தது போல் இழுத்துவிட்டு …. நீ…..யா ?
ஜெயந்தன் : சரி நான் தான் இருக்கட்டும் … நீ எப்படி இங்க …
தேவா : ம் … சைக்கிளுக்கு டயரு இருக்கான்னு பாக்கிறேன் … நீ கொஞ்சம் பாத்துதான் சொல்றது
ஜெயந்தன் : மிஸ்டர் தேவா நீங்க என்னை தப்பா நெனெச்சுக்கிட்டு இருக்கிங்க …
கெஞ்சியபடி …
தேவா : யப்பா யப்பா நான் ஒன்னும் தப்பா நினைக்கிலப்பா, என்ன உடு … நீ எதுக்கு இங்க வந்தே ?
ஜெயந்தன் : எனக்கு மாடுவாங்க பணம் கொடுத்தெ இல்லெ … அத …
தேவா : குடு .. குடு … சீக்கிரமா குடுத்துட்டு போப்பா … யப்பா…. யப்பா ஒன்ன தப்பு தப்பா நினெச்சிட்டேம்பா.
தேவா : தப்பு … பண்ணிட்டம்பா தப்பு …. (உருகுகிறார்)
நக்கலாக,
ஜெயந்தன் : இப்பவும் தப்பு தப்பாதான் புரிஞ்சிக்கிட்டே, நான் உன் கிட்ட பணம் கொடுக்கப் போறேன்னு சொல்லவேயில்ல அதுக்குள்ள அவசரகுடுக்கையாட்டம்…
பணம் வராது என்று மிரண்டபடி..
தேவா : சரி நான் தான் தப்பு பண்ணிடேன்னு வெச்சுக்க …
ஜெயந்தன் : அட நானும் அத தாம்பா தான் சொல்றேன் …
தேவா : எந்த எழவோ இருக்கட்டும் … சரி பணம் கொடுக்க வரலை பின்ன எதுக்கு வந்தே ?
ஜெயந்தன் : அப்படி விவரமா கேளு… பணம் அடுத்த மாசம் தரலாம்னு யோசனைப் பண்ணி … அதை உன்கிங்ட்ட சொல்லத் தான் தேடிக்கிட்டு இருந்தேன்.
தேவா : அப்ப நீ பணம் குடுக்க வரலையா …
தேவா : நாமம் போட்டுடான்யா போட்டுடான் …
என்று புலம்புகிறார்
ஜெயந்தன் : மிஸ்டர் தேவா ரொம்ப புலம்பாதிங்க … உன் பணத்தை எண்ணி உன்கிட்ட கொடுத்திடுறேன்… ஆனா ஒரு விசயம் எனக்கு தெரிஞ்சாவனும்
தேவா : என்னப்பா தெரியனும் ?
ஜெயந்தன் : நீ இப்ப … இங்க… என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?
தேவா : ம்… பாத்த தெரியல… முறுக்கு விக்கிறேன் முறுக்கு
ஜெயந்தன் : எங்க இன்னொரு தரம் சொல்லு பார்க்கலாம் என்ன விக்கிற ?
தேவா : கேட்டுத்தான் பாரேன் … முறுக்கு முறுக்கு
என்று கூவிகாட்டுகிறார்
ஜெயந்தன் : ரெண்டு முறுக்கு விக்கிறியா ?
தேவா : ரெண்டு முறுக்கு இல்லப்ப, மூனு முறுக்கு ரூவாய்கு மூனு முறுக்கு
ஜெயந்தன் : முறுக்கு தானே விக்கிறே, அப்பறம் ஏன் முறுக்கு முறுக்குன்னு ரெண்டு தரம் சொல்ற, முறுக்குன்னு சொல்லி வித்தா விக்காதா ? முறுக்கு முறுக்குன்னு அடுக்கி சொன்னா தான் விக்குமா ?
தேவா : யப்பா யப்பா… ஊரு உலகத்துல உள்ளவங்க எல்லாமே முறுக்கு முறுக்குன்னு தானே விப்பாங்க .. இது என்ன வில்லங்கமா இருக்கு ?
ஜெயந்தன் : சரி சரி இன்னொருதரம் சொல்லு போய்டுறேன்
‘விடமாட்டான் போல … எப்படியோ போய் தொலையிறேன் சொல்கிறானே’ என்று நினைத்த வடிவேலு. கூவி காட்டுகிறார்
தேவா : முறுக்கு… முறுக்கு… நெய்முறுக்கு… முறுக்கு வாங்கலையோ முறுக்கு … போதுமாப்பா ?… நீ கெளம்பு..
ஜெயந்தன் : என்னது கிளம்பனுமா … என்ன சொன்ன நெய்முறுக்கா ? எங்க ஒன்னு குடு தின்னு பார்கிறேன்
மனதில் அழுதபடி தேவா எடுத்து கொடுக்கிறார். ஜெயந்தன் வாங்கி கடித்துவிட்டு வேகமாக துப்புகிறார்.
ஜெயந்தன் : தூ .. இது நெய்முறுக்கா ?
தேவா : என்ன அப்படி கேட்டுப்புட்ட …. நெய் முறுக்கு இல்லாட்டி வேற என்ன முறுக்காம் ?
ஜெயந்தன் : இது நெய் முறுக்கு இல்ல … பொய் முறுக்கு
தேவா : என்னப்பு சொல்லுறிய …?
ஜெயந்தன் : அதான் பாத்தேனே … கலையில நீ செட்டியார் கடையில … ‘யோவ் செட்டி ..பாமாயில் அஞ்சு லிட்டுருரு.. பாத்து ஊத்து … ஒரு சொட்டு குறைஞ்சாலும் ஒனக்கு உடம்புல உயிரு தங்காது’ ன்னு சவுன்டு உட்டத
தேவா : பாத்துட்டான்யா பாத்துட்டான் …ஆமாப்பா … இந்த முறுக்கெல்லாம் பாமாயில்ல செஞ்சது தான் … ஒரே ஒரு கரண்டி மட்டும் தான் நெய் உத்தினேன். இப்ப என்ன செய்யனும்கிற…
ஜெயந்தன் : அப்ப எதுக்கு பாமாயில் முறுக்க .. நெய்முறுக்குன்னு பொய் சொல்லி விக்கிறே ?
தேவா : ஊரு ஒலகத்துல எல்லாரும் செய்யறத தாம்ப்பா நானும் செய்றேன் … உட்டுடுபா
ஜெயந்தன் : உடுறதா … நீ பாமாயில் முறுக்குன்னு கூவி விக்கிறத பாக்காம நான் எடத்த காலிபண்ண மாட்டேன்.
தேவா : நின்னுட்டான்யா …. நின்னுட்டான் … அப்படியெல்லாம் சொன்ன ஒருத்தனும் வாங்க மாட்டான்யா
ஜெயந்தன் : அப்ப பொய் சொல்லி பொழப்பு நடத்துற … இல்லே ?
தேவா பற்களை நரநர வென்று கடித்த படி.. முறுக்கு டின்னை எடுத்து தலைகீழாக ரோட்டில் முறுக்குகள் எல்லாவற்றையும் கொட்டி கோபமாக,
தேவா : கெடுத்துட்டான்யா … கெடுத்துட்டான் … எம் பொழப்ப கெடுத்துட்டான்
என்று சட்டைய கிழித்துக் கொள்கிறார்
அந்த நேரம் பார்த்து ஒரு மனநல மருத்துவமனை வேன்வர … ஜெயந்தன் கையை நீட்டி நிறுத்தி தேவாவை காட்டுகிறார்
ஜெயந்தன் : சார் பாருங்க … யாரோ முறுக்கு காரனை அடித்து துரத்திவிட்டு … எல்லாத்தையும் கொட்டிட்டு நிக்கிறான் … அவன் தான் புடிச்சிட்டு போங்க …
தேவா துள்ள துள்ள அள்ளிச் செல்கிறார்கள்
தேவா : நீ நல்ல இருப்பியா ? … பாவி பாவி
என்று கத்தியபடி இருக்க வேனில் திணிக்கபடுகிறார்
கீழே கிடந்த முறுக்கு ஒன்றை எடுத்து கடித்த ஜெயந்தன்.
ஜெயந்தன் : நல்லா இருக்கே … நெசமாவே நெய் முருக்குதான் … தேவா மிஸ்டர் தேவா …
வேன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டிருந்தது
நன்றி -ஜெயந்தன்